BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Colachel News. Show all posts
Showing posts with label Colachel News. Show all posts

வேல் வேல் வெற்றி வேல்.. அரோகரா.. குளச்சலை ஸ்தம்பிக்க வைத்த காவடி பவனி

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், குளச்சல் வட்டார பகுதிகளிலிருந்து கொட்டும் மழையில் 200க்கு மேற்பட்ட விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.
காவடி பவனியால் திங்கள்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் 6 மணி நேரம் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், குளச்சல் வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான ஊர்களிலிருந்து முருக பக்தர்கள் காவடியேந்தி செல்வது வழக்கம். 

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பறக்கும் காவடி, தொட்டில் காவடி, அக்னி காவடி, சூரிய காவடி, புஷ்ப காவடி என பல்வேறு விதமான 200க்கும் மேற்பட்ட காவடிகளுடன் முருக பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டனர்.

நடைபயணமாக புறப்பட்ட பக்தர்கள் நெல்லை மாவட்டம் வழியாக நாளை திருச்செந்தூரை சென்றடைந்து தரிசனம் செய்வார்கள். காவடி பவனியின் போது சாரல்மழை பெய்து கொண்டிருந்த போதிலும், குழந்தைகளை ஏந்தி நின்ற தாய்மார்கள் உட்பட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தியோடு கண்டு களித்தனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி, குளச்சல் திங்கள்நகர், நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. காவடி பவனி காண வந்த பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெரு மழை.. சிலையின் தலையில் விழுந்த இடி.. சோகத்தில் திமுக தொண்டர்கள்.. குளச்சலில் பரபரப்பு

குளச்சலில் பெய்து வரும் கனமழையால் இடி தாக்கியதில், திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த அறிஞர் அண்ணாவின் சிலை உடைந்து சேதமடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக தீவிரமடைந்து காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது மட்டுமில்லாமல் குளம் குட்டைகள் நிறைந்து வழிந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

எனினும் கடந்த இரு வாரங்களாக கனமழை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று மாலை, முதல் குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது குளச்சல் காவல் நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையின் மீது இடி விழுந்ததில் அண்ணாசிலையின் தலைப்பகுதி முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த சிலை 1970 -ம் ஆண்டு அப்போதைய புதுவை முதலமைச்சர் பாருக் மரைக்காயர் முன்னிலையில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. குளச்சலில் இடி தாக்கியதில் அண்ணா சிலையின் தலைப்பகுதி உடைந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தற்போது சுகவீனமாக உள்ள நிலையில் அவரால் திறந்து வைக்கப்பட்ட சிலையின் தலை சேதமடைந்திருப்பது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள்: போர்பந்தரில் இருந்து குமரிக்கு ரயில் வேண்டும்- குளச்சல் எம்எல்ஏ

மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா முழுக்க மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. வரும் 2019 அக்டோபர் 2ம் தேதியில் இருந்து, அக்டோபர் 2020 வரை இந்த விழா நடக்க உள்ளது. இதற்காக நாடு முழுக்க பல திட்டங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

காந்திக்கு இந்தியாவில் பல இடங்களில் நினைவிடம் இருப்பது போலவே, கன்னியாகுமரியில் நினைவிடம் இருக்கிறது. காந்தியின் சாம்பல் இந்தியா முழுக்க பிரித்து அனுப்பப்பட்டு, கடைசியாக, ஒரு பகுதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

பின்னர் அவர் நினைவாக 1956ல் அங்கு பெரிய நினைவு மண்டபமும் கட்டப்பட்டது. உலகம் முழுக்க தினமும் பலர் இந்த நினைவு மண்டபத்தை பார்க்கக் வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் எதுவும் இல்லை. இதனால் போர்ப்பந்தரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாக ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்று குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் பிறந்த நாள் விழாவை ஒட்டி இதை ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளார். தற்போது போர்பந்தரில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர ரயில் செல்கிறது. கொச்சுவேலி ரயில் நிலையம் குமரியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதை குமரி வரை நீட்டித்து, அந்த ரயிலுக்கு மகாத்மாவின் பெயரை வைக்க வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த மாதம் வெளியாக உள்ள ரயில்வே அட்டவணையில் இதற்கான திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

என்னை லவ் பண்ணாமல் நீயெல்லாம் இருந்து என்ன பயன்? வாலிபரின் வெறிச்செயல்!

காதலுக்கு வன்முறை தெரியுமா? வன்முறை இருந்தால் அது காதலாகுமா? இரு தரப்பிலும் காதல் என்பதே விருப்பத்தின்பேரில் வருவதுதானே? அடித்து, மிரட்டி, பயமுறுத்தி, தாக்குதல் நடத்தினால் மட்டும் என்ன வராத காதல் வந்துவிடவா போகிறது? காதலிக்க விருப்பமில்லாத பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தன் காதலுக்காகத்தான் அவ்வாறு செய்தேன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? அப்படித்தான் உள்ளது இந்த சம்பவமும்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகள் சஜினா.இவர் குளச்சலில் உள்ள லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கிய பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதேக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் விக்னேஷ் என்பவர் சஜிதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சஜினாவுக்கு விக்னேஷை சுத்தமாக பிடிக்கவில்லை. பலமுறை அதை சொல்லியும் விக்னேஷ் பொருட்படுத்தின மாதிரியே தெரியவில்லை. தொடர்ந்து காதல் டார்ச்சர் தொடரவும், கல்லூரி நிர்வாகத்திடம் சஜினா முறையிட்டு விட்டார். இந்த விஷயம் விக்னேஷூக்கு தெரியவந்ததும், ஆத்திரம் அடைந்தார். உயிருக்கு உயிராக விரும்பியும், தன்னை இப்படி மாட்டிவிட்டுவிட்டாளே என்று கோபம் அடைந்த விக்னேஷ், சஜினாவிடம் இதைப்பற்றி கேட்க நினைத்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல சஜினா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ், தனது நண்பர்களான சுதன், ராஜாசிங் ஆகியோருடன் பைக்கில் வந்து சஜினா அருகில் நின்றார். என்னை லவ் பண்ணாமல் நீயெல்லாம் இருந்து என்ன பயன்? என்னை பிடிக்கவில்லை என்று கூறிய நீ உயிரோடு இருக்க வேண்டாம் என்று கூறி சஜினாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரை பலமாக அடித்தார். மேலும் தனது கை முழங்கை முட்டியை கொண்டே சஜினாவின் மார்பில் ஓங்கி இடித்தார். இதில் நிலைகுலைந்து போன சஜிதா கீழே தடுமாறி விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத விக்னேஷ், சஜினாவின் தலையை எட்டி எட்டி உதைத்துள்ளார்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த உடன்இருந்த தோழி நதியா என்பவர் சஜிதாவை தாங்கி பிடிக்க முயன்றார். நதியாவையும் 3 மாணவர்களும் தாக்கினர். இதில் இருவருமே படுகாயமடைந்து வலியால் அலறி துடித்தனர். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவருவதற்குள் 3 மாணவர்களும் பைக் எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். காயமடைந்த மாணவிகளை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மார்பில் மாணவர் பலமாக இடித்ததால், சஜினாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுயநினைவையும் அவர் இழந்துள்ளார். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அந்த மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி ஆரம்பித்தனர். இதில் ராஜாசிங் என்பவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்ற 2 பேரை வலைவீசி போலீசார் தேடிவருகின்றனர். இதுதவிர, குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி வினோஜ் கல்லூரி மற்றும் சம்பவ இடத்தில் இன்று நேரில் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

செல்பி எடுக்க குளச்சல் கடலின் பாறைமேல் நின்ற இளைஞர் அலையில் சிக்கி மாயம்!

குளச்சலில் கடலின் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்ற வட மாநில இளைஞர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதையடுத்து கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் இளைஞரை படகுகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குளச்சலில் உள்ள போர் வெற்றித்தூண் அருகே மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடல் நடுவே அமைந்துள்ள பகுதிகள் புனித அலெக்ஸ் பாறை உள்ளிட்டவை. இதனை கண்டுகளிக்க உள்ளூர் மட்டுமில்லாமல் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் வருகின்றனர். இதில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக விடுமுறை தினம் என்பதால் குளச்சல் கடற்கரையில் கூட்டம் வழிந்து நிறைந்தது. நேற்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் தங்கி வேலை பார்க்கும் கொல்கத்தாவை சேர்ந்த ஆசிக் மாலிக்,என்பவர் குளச்சலுக்கு தனது நண்பர்கள் 5 பேருடன் வந்தார். நண்பர்கள் அனைவரும் அவருடன் தங்கி வேலைபார்க்கும் உ.பியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் கடற்கரை பகுதிகளை சுற்றிபார்த்து செல்பி எடுத்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

கடைசியாக புனித அலெக்ஸ் பாறை மீதுஏறி நின்று அவர்கள் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஆசிக் மாலிக் செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென்று எழுந்த ராட்சத அலை ஒன்று, அவரை இழுத்து சென்றது. நடுக்கடலில் இளைஞர் ஆசிக் மாலிக் தத்தளித்தார். அவரை காப்பாற்ற சக நண்பர்கள் கூச்சலிட்டனர். ஆயினும் மீட்க மீனவர்கள் விரைந்து வருவதற்குள் ஆசிக்மாலிக் கடலில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த கடலோர போலீசார் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் மாயமான இளைஞரை தேடி வருகின்றனர்.

குளச்சல் துறைமுக திட்டத்துக்கு கேரளா எதிர்ப்பு... கட்சி கடந்து கச்சை கட்டுகிறார்களாம்!!

குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கேரளா. இது தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

ஆனால் இந்த திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குளச்சல் துறைமுகத்தால் விழிஞ்ஞத்தில் தாங்கள் அமைத்து வரும் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகிறது கேரளா. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது.
இனயத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞ்ஞத்தில் ரூ.7 ஆயிரத்து 525 கோடியில் அதானி குழுமம் துறைமுகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் குளச்சல் துறைமுக பிரச்சினையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.வின்சென்ட் எழுப்பினார்.

சட்டசபையில் வின்செட் பேசுகையில், விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில், குளச்சல் துறைமுகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் திட்டமிட்ட செயல் என்றார்.

மேலும் மத்திய அரசின் சகர்மலா திட்டத்தின் கீழ் குளச்சல் துறைமுகம் வருவதாக கூறிய வின்சென்ட், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு அடிக்கப்போகும் சாவு மணியே குளச்சல் துறைமுகம்; இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு நெறியற்ற முறையில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்துக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை விட அதிக அளவு நிதியும் தேவைப்படுகிறது. விழிஞ்ஞத்தில் இருந்து வெறும் 30 கி.மீ. தொலைவில் சாத்தியப்படுத்த முடியாத மற்றொரு துறைமுகம் அமைப்பது விஞ்ஞானப்பூர்வமற்றது. பொதுமக்களின் வரிப்பணத்தை இது போன்ற முரண்பாடற்ற வழிகளில் செலவழிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கேரள எம்.பி.க்கள் நாளை ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்து ஆலோசனை நடத்துவர். அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி அவர்கள் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை எழுப்புவார்கள் என்றார். கட்சி கடந்து கச்சை கட்டுகிறார்களாம்!

குளச்சலில் துறைமுகம் அமைப்பதற்கு கேரளா எதிர்ப்பு: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

தமிழகத்தில் குளச்சல் அருகே இனையம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதால் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் பாதிக்கும் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குளச்சல் அருகே இனயம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு கேரளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள அமைச்சரவையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகாமையில் இன்னொரு துறைமுகம் அமைக்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்? என கேரள துறைமுகத் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

கொச்சி துறைமுகத்தை காட்டி விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இதற்கு முன் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, இப்போது மாநில அரசு தனது அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

35 கி.மீ. தொலைவில் இரண்டு துறைமுகங்கள் அமைவதால் பயனில்லை என்றும், இந்த புதிய துறைமுகம் விழிஞ்சம் வர்த்தக துறைமுகத்தை பாதிக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.