கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், குளச்சல் வட்டார பகுதிகளிலிருந்து கொட்டும் மழையில் 200க்கு மேற்பட்ட விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.
காவடி பவனியால் திங்கள்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் 6 மணி நேரம் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர், குளச்சல் வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான ஊர்களிலிருந்து முருக பக்தர்கள் காவடியேந்தி செல்வது வழக்கம்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பறக்கும் காவடி, தொட்டில் காவடி, அக்னி காவடி, சூரிய காவடி, புஷ்ப காவடி என பல்வேறு விதமான 200க்கும் மேற்பட்ட காவடிகளுடன் முருக பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டனர்.
நடைபயணமாக புறப்பட்ட பக்தர்கள் நெல்லை மாவட்டம் வழியாக நாளை திருச்செந்தூரை சென்றடைந்து தரிசனம் செய்வார்கள். காவடி பவனியின் போது சாரல்மழை பெய்து கொண்டிருந்த போதிலும், குழந்தைகளை ஏந்தி நின்ற தாய்மார்கள் உட்பட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தியோடு கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியையொட்டி, குளச்சல் திங்கள்நகர், நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. காவடி பவனி காண வந்த பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
No comments
Post a Comment