காதலுக்கு வன்முறை தெரியுமா? வன்முறை இருந்தால் அது காதலாகுமா? இரு தரப்பிலும் காதல் என்பதே விருப்பத்தின்பேரில் வருவதுதானே? அடித்து, மிரட்டி, பயமுறுத்தி, தாக்குதல் நடத்தினால் மட்டும் என்ன வராத காதல் வந்துவிடவா போகிறது? காதலிக்க விருப்பமில்லாத பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தன் காதலுக்காகத்தான் அவ்வாறு செய்தேன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? அப்படித்தான் உள்ளது இந்த சம்பவமும்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகள் சஜினா.இவர் குளச்சலில் உள்ள லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கிய பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதேக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் விக்னேஷ் என்பவர் சஜிதாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் சஜினாவுக்கு விக்னேஷை சுத்தமாக பிடிக்கவில்லை. பலமுறை அதை சொல்லியும் விக்னேஷ் பொருட்படுத்தின மாதிரியே தெரியவில்லை. தொடர்ந்து காதல் டார்ச்சர் தொடரவும், கல்லூரி நிர்வாகத்திடம் சஜினா முறையிட்டு விட்டார். இந்த விஷயம் விக்னேஷூக்கு தெரியவந்ததும், ஆத்திரம் அடைந்தார். உயிருக்கு உயிராக விரும்பியும், தன்னை இப்படி மாட்டிவிட்டுவிட்டாளே என்று கோபம் அடைந்த விக்னேஷ், சஜினாவிடம் இதைப்பற்றி கேட்க நினைத்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல சஜினா பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ், தனது நண்பர்களான சுதன், ராஜாசிங் ஆகியோருடன் பைக்கில் வந்து சஜினா அருகில் நின்றார். என்னை லவ் பண்ணாமல் நீயெல்லாம் இருந்து என்ன பயன்? என்னை பிடிக்கவில்லை என்று கூறிய நீ உயிரோடு இருக்க வேண்டாம் என்று கூறி சஜினாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரை பலமாக அடித்தார். மேலும் தனது கை முழங்கை முட்டியை கொண்டே சஜினாவின் மார்பில் ஓங்கி இடித்தார். இதில் நிலைகுலைந்து போன சஜிதா கீழே தடுமாறி விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத விக்னேஷ், சஜினாவின் தலையை எட்டி எட்டி உதைத்துள்ளார்.
இதனைகண்டு அதிர்ச்சியடைந்த உடன்இருந்த தோழி நதியா என்பவர் சஜிதாவை தாங்கி பிடிக்க முயன்றார். நதியாவையும் 3 மாணவர்களும் தாக்கினர். இதில் இருவருமே படுகாயமடைந்து வலியால் அலறி துடித்தனர். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவருவதற்குள் 3 மாணவர்களும் பைக் எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். காயமடைந்த மாணவிகளை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மார்பில் மாணவர் பலமாக இடித்ததால், சஜினாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுயநினைவையும் அவர் இழந்துள்ளார். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அந்த மூவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி ஆரம்பித்தனர். இதில் ராஜாசிங் என்பவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்ற 2 பேரை வலைவீசி போலீசார் தேடிவருகின்றனர். இதுதவிர, குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி வினோஜ் கல்லூரி மற்றும் சம்பவ இடத்தில் இன்று நேரில் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
No comments
Post a Comment