BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Sports News. Show all posts
Showing posts with label Sports News. Show all posts

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது. 

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:- 

இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் 

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், ஹெண்ட்ரிக்ஸ், மேக்ஸ்வெல், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

டோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து

சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்னையத்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். டோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை. 

தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், டோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். 

அதே போல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் டோனி கைதேர்ந்தவர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு டோனியைப் போன்றதொரு வீரர் அவசியம்” என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சொதப்பியது. இதனால் ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்து மலைக்க வைத்து விட்டது. ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் சதம் விளாசினர். இவர்களை கட்டுப்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டுமே மிச்சம். ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு கூட எடுபடவில்லை. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

இந்தியாவின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தனர். ஹர்திக் பாண்ட்யாவும், ஷிகர் தவானும் அரைசதம் அடித்ததால் 300 ரன்களை கடக்க முடிந்தது. பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் பவுலிங் செய்வதற்குரிய முழு உடல்தகுதியை எட்டாதது பின்னடைவு தான். முன்னணி பவுலர்களின் பந்து வீச்சு சிதைக்கப்படும் போது பகுதி நேர பவுலர்கள் கைகொடுப்பது உண்டு. அத்தகைய வீரர்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துவதாக கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே குறைப்பட்டு கொண்டார். 

விராட் கோலி, சிட்னி மைதானத்தில் இதுவரை சாதித்ததில்லை. இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே (சராசரி 11.40 ரன்) எடுத்துள்ளார். அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவுகட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
 
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்னும் உற்சாகமாக களம் இறங்குவார்கள். ஆரோன் பிஞ்ச் (114 ரன்), டேவிட் வார்னர் (69 ரன்), ஸ்டீவன் சுமித் (105 ரன்) முதல் ஆட்டத்தை போன்று ஜொலிக்கும் முனைப்புடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆணிவேரான இவர்களை அசைத்தால் மட்டுமே அந்த அணியின் ரன்வேட்டைக்கு முட்டுக்கட்டை போட முடியும். ஹேசில்வுட்டின் (3 விக்கெட்) ஷாட்பிட்ச் பந்துகளும், ஆடம் ஜம்பாவின் (4 விக்கெட்) சுழலும் தொடக்க ஆட்டத்தில் அவர்களுக்கு பலனை தந்தன. அதே உத்வேகத்துடன் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார்கள். 

மொத்தத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய வீரர்களும், இந்த ஆட்டத்துடன் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

இரு அணிகளிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் விலாபகுதியில் ஏற்பட்ட காயத்தால் முதல் ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். இந்த ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் லேசான தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவதிப்படுகிறார். இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். 

சிட்னி மைதானத்தில் கடைசியாக ஆடிய 8 ஆட்டங்களில் 7-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- 

இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர் அல்லது டி.நடராஜன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ். 

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கேமரூன் கிரீன் அல்லது சீன் அப்போட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட். 

இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாப் டுபிளிஸ்சிஸ் 58 ரன்னும் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டெர் துஸ்சென் 37 ரன்னும், கேப்டன் குயின்டான் டி காக் 30 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஜானி பேர்ஸ்டோ (86 ரன்கள், 48 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை நிலைத்து நின்று அதிரடியாக ஆடியதுடன் சிக்சர் விளாசி இலக்கை எட்ட வைத்தார். அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களில் (27 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 

இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி பார்லில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் பந்து வீசவில்லை. ஐ.பி.எல். தொடரிலும் ஒரு பந்து கூட வீசவில்லை. தான் பந்து வீசுவதற்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், சரியான நேரம் வரும் போது பவுலிங் செய்வேன் என்றும் கூறினார். இதனால் 6-வது பந்து வீச்சாளர் மற்றும் பகுதிநேர பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திண்டாடுகிறது.
இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணி சரிசம கலவையில் (ஆடும் லெவன் அணி) இல்லாமல் தடுமாறுகிறது. கடந்த உலககோப்பை போட்டியில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் 6-வது பந்துவீச்சு வாய்ப்புக்கு யார் இருக்கிறார்? விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வரிசையில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு 5-வது அல்லது 6-வது பேட்டிங் வரிசையில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது சந்தேகம்தான். இதே போல் அவரால் 7-8 ஓவர்கள் நேர்த்தியாக வீச முடியுமா? இதுவும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 

ரோகித் சர்மா அணிக்கு திரும்பினாலும் கூட இது போன்ற சிக்கலை சரி செய்ய முடியாது. டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவதற்கு யாரும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இந்த பிரச்சினை இல்லை. ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் கைகொடுக்கிறார்கள். இந்திய அணியின் பார்வையில், ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் அந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என்பதே எனது கேள்வி’ என்றார்.

20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் - தெண்டுல்கர் கருத்து

நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பதை இறுதிசெய்ய அடுத்த மாதம் வரை காத்திருப்பது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் நிதி நிலைமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய அம்சங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதில் முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதை விட பெரிது எதுவும் இல்லை.’ என்றார்.

மேலும் தெண்டுல்கர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகமான சூழலை உருவாக்குவது கடினம். கேலரியில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக மற்ற நாடுகளும் கிரிக்கெட் விளையாட தொடங்கும்.’ என்றார்.

2007-ம் ஆண்டில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினார் - முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் தகவல்

1989-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சச்சின் தெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 200 டெஸ்டில் ஆடி 51 சதம் உள்பட 15,921 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 49 சதம் உள்பட 18,426 ரன்னும் குவித்துள்ளார். ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் ஆடி இருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் சிறந்த தொடக்க வீரராக உருவெடுத்த தெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளை படைத்தார். ஆனால் 2007-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிடில் வரிசையில் விளையாட தெண்டுல்கருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) ஆலோசனையின் பேரில் செய்யப்பட்ட இந்த பேட்டிங் வரிசை மாற்றம் தெண்டுல்கருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் மோசமாக தோற்று தொடக்க சுற்றுடன் வெளியேறியது. அந்த போட்டியுடன் கிரேக் சேப்பலின் பயிற்சியாளர் பதவியும் காலியானது.

கிரேக் சேப்பல் வெளியேறிய பிறகு 3 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் (தென்ஆப்பிரிக்கா), பேட்டிங் வரிசை மாற்றத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 2007-ம் ஆண்டில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்ததாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து கிர்ஸ்டன் சமூக வலைதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நான் ஏற்க வந்த தருணத்தில் தெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக விரும்பினார்.

தனக்கு பொருத்தமான பேட்டிங் வரிசையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நினைப்பதாக நான் அறிந்தேன். பிறகு அவர் விரும்பிய வரிசையில் (தொடக்க ஆட்டக்காரர்) விளையாட திரும்பிய அடுத்த 3 ஆண்டு காலத்தில் 18 சர்வதேச சதங்களை அடித்து அசத்தினார். அத்துடன் நாங்கள் 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் வென்றோம். இந்திய அணியினுடனான எனது பயிற்சி பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் சவுகரியமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் பணியை நான் சரியாக கவனித்தேன்’ என்றார்.

100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - லியாண்டர் பெயஸ் ஆசை

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. விம்பிள்டன் போட்டி ரத்தானது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு தள்ளிவைக்கலாமா? என்ற யோசனையில் இருக்கிறார். லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி தொடங்குமா என்பது சந்தேகம் தான். அக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி தொடங்கும் போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்ததும், 2021-ம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன்.

இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 போட்டிகளில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்ற இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால், ஒலிம்பிக்கில் அதிகமுறை (8-வது முறை) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இதை இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிசில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான் என்று பெயஸ் கூறினார்.

1993-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பெயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்புஇரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காயத்துக்கு மீண்டும் ஆபரேஷன்: இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகல்

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான ரோஜர் பெடரருக்கு கடந்த பிப்ரவரி மாதம் வலது கால்முட்டி காயத்துக்கு சிறிய அளவில் ஆபரேஷன் நடந்தது.
இந்த நிலையில் மறுபடியும் அதே முட்டியில் பிரச்சினை ஏற்பட்டதால் 2-வது முறையாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் களம் திரும்ப முடிவு எடுத்துள்ள பெடரர் இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு சீசனை எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 38 வயதான பெடரர், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட போட்டிகளை தவற விடுகிறார்.

மீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்

கொரோனா காரணமாக ஜூலை மாதம் வரை அனைத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் செர்பியாவின் ஜோகோவிச் அறக்கட்டளை அமைப்புக்கு உதவும் வகையில் அட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்தப்பட உள்ளது.
இன்று செர்பியாவின் பெல்கிரேடில் இத்தொடர் தொடங்குகிறது. அடுத்து ஜடார் (ஜூன் 21-;22), மான்டெனக்ரோ (27-;28), பன்ஜ லுகா (ஜூலை 3-;4) நகரங்களில் இது நடக்கும். மூன்று மாதத்திற்குப் பின் களமிறங்கும் ஜோகோவிச்சுடன், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பல்கேரியாவின் டிமிட்ரோவ், குரோஷியாவின் போர்னா கோரிச், மரின் சிலிச் இதில் பங்கேற்க சம்மதித்துள்ளனர்.

இதற்கான முதல் 1000 டிக்கெட்டுகள் 7 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ - 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி

அமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்த வீனஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் (5 விம்பிள்டன் மற்றும் 2 அமெரிக்க ஓபன்), ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்று இருக்கிறார்.
ஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. 2016-ம் ஆண்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார். இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன். என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.