BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label State News. Show all posts
Showing posts with label State News. Show all posts

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பதை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 நாட்களில் 8-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 19 காசுகளும் டீசல் விலை 28 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.31-க்கும் டீசல் ரூ.77.84-க்கும் விற்பனையாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு நாளை மறுதினம் வருகை

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்வது வழக்கமாக உள்ளது. முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நிவர் புயல் வீசியது. அப்போது காற்று பலமாக வீசியதோடு கன மழையும் பெய்தது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன. நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன. 

இவற்றுக்கு இழப்பீட்டை வழங்கும்படி மக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். நிவாரண உதவிகளை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்திருந்தனர். 

இந்த நிலையில் நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய அரசு, குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு டிசம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த குழுவில் டெல்லியில் உள்ள மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் (செலவினங்கள்), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய மின்சார துறை செயலாளர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகிய 7 பேர் இடம் பெற்று உள்ளனர். டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்திற்கு வரும் அவர்கள், 2-ந் தேதி புயல் பாதித்த இடங்களுக்குச் செல்கிறார்கள். இங்கு வந்த பிறகு எந்தெந்த இடத்துக்குச் சென்று பார்வையிடுவது என்பதுபற்றி முடிவு செய்வார்கள். 

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சேதமடைந்த விளை நிலங்கள், மா, தென்னை, வாழை விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளையும் பார்வையிடுவார்கள். தமிழகத்தில் பார்வையிட்ட பின்பு புதுச்சேரிக்குச் சென்று அங்கு புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பீடு செய்வார்கள். 

சேதமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதை கணக்கிட்டு அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் பின்னர் வழங்குவார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் அவர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சுரேஷ், துணைத்தலைவர்களாக பாலமுருகன், பிரீத்தி சஞ்சனா, செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர்களாக பிரசாத், பத்மாவதி, சுஜைனி, ஜெய சசிகுமார், துணைச்செயலாளர்கள் - சதீஷ் ராஜ், தனஸ்ரீ விஜயபாஸ்கர், விஜய் பாரத், வினோத்குமார், மோகன பிரியா, பொருளாளர் மணிகண்டன். 

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக காமேஷ், துணைத்தலைவர்களாக ராஜசேகர், சரவணகுமார், செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார், இணைச்செயலாளர்களாக பிரபு, உமாசங்கர், ரித்திஷ், கோபிநாத், துணைச்செயலாளர்களாக சி.சரவணபிரபு, டி.நிவாஸ், எஸ்.தரணிதரன், அக்ரி கே.பாலாஜி, எஸ்.ராஜசேகரன், பொருளாளராக எஸ்.ஜெகதீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக எஸ்.டி.தர்மேஷ்குமார், துணைத்தலைவர்களாக எஸ்.வி.ராதாகிருஷ்ணன், எம்.செண்பகராஜ், செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், இணைச்செயலாளர்களாக ஜே.அபிஷேக் ஜேக்கப், எஸ்.விக்னேஷ், வி.ராஜகோபால், ஏ.எம்.கார்த்திக், துணைச்செயலாளர்களாக கவுதம் ஜி.பால்ராஜ், எல்.அருண், கார்த்திக் பொன்னுசாமி, எம்.கே.எம்.கணேஷ், எம்.ரமணிகாந்த், கே.எஸ்.மோகன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக என்.ராஜராஜசோழன், துணைத்தலைவர்களாக எஸ்.சத்தியமூர்த்தி, மணவை ஜே.ஸ்ரீதரன் ராவ், செயலாளராக பி.வினுபாலன், இணைச்செயலாளர்களாக பி.இளவரசன், எம்.சதீஷ்குமார், ஏ.திருநாவுக்கரசு, டி.ரமேஷ்குமார், துணைச்செயலாளர்களாக, சுரேஷ், மணிகண்டன், அரியலூர் கோபாலகிருஷ்ணன், பாலாஜி, ராமச்சந்திரன், பொருளாளர் அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர்கள் கவுரிசங்கர், கவின்ராஜ், செயலாளராக ராஜ்சத்யன், இணை செயலாளராக மணிகண்டன் கிருஷ்ணன், நல்லகுமார், ஹாஜா அமீர் ஹூசைன் சாஹிப், விக்னேஷ், துணை செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், மலேஷ், மந்திரமூர்த்தி, தமிழ்செல்வன், சிவ ஆனந்த், பொருளாளர் பான்பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தொலைக்காட்சிகள், சமூக தொடர்பு ஊடகங்களில் அ.தி.மு.க. நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர் பட்டியலில் அப்சரா ரெட்டி இணைத்து கொள்ளப்படுகிறார்” என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

கொரோனா பரிசோதனை செய்யும் அளவு ஒருபோதும் குறையக்கூடாது. 100 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற ‘பாசிடிவிடி ரேட்’ 2 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வர செயலாற்ற வேண்டும். 

ஒட்டுமொத்த இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். சிறப்பு சிகிச்சை விதிமுறைகளை பின்பற்றி இறப்பு இல்லாத நிலையை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். 

தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் சுகாதார சிக்கல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 

நமது மாநிலத்தில் 30 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே முக கவசம் அணிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்க்கெட், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சமூக மற்றும் மதம் சார்ந்த ஒன்று கூடல்கள் உள்பட பல்வேறு பொது இடங்களில் கொரோனா ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவது இல்லை. 

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத குறிப்பாக முக கவசம் அணியாத தனிநபர், திருமண மண்டபத்தின் உரிமையாளர், திருமணத்தை நடத்துபவர்களுக்கு அபராதம் விதியுங்கள். தேவைப்பட்டால் கண்டிப்பான நடவடிக்கையும் எடுங்கள். 

வணிக வளாகங்கள், பணி செய்யும் இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு அதன் உரிமையாளர்களை பொறுப்பாக நிர்ணயிக்கவேண்டும். இந்த இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்டிப்புடன் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். விழாக்காலங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாததால் தேவையில்லாமல் ஏற்படும் நோய் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தற்போதைய நிலையில் எடுக்க வேண்டும். 

மழைக்காலம் மற்றும் அதனைதொடர்ந்து வரும் குளிர்காலத்தில் நோய் தொற்று அதிகரித்தால், சில மாநிலங்களை போன்று அதனை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை கலெக்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுந்த நடவடிக்கைகளை இப்போது எடுக்கவில்லை என்றால், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகிவிடும். 

அதனால் நோய் தடுப்பு முறைகள் பொது இடங்கள், பணி இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். நோய் தடுப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றி கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து எறிந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாதிரி மாநிலம் என்ற அந்தஸ்தை பெறுவதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலாவும், இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உலாவும் நடந்தது. இதை காண திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர விழாவான மகா தீப தரிசனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.15 மணியளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் தீபத்திற்கு தேவையான நெய், காடா துணிகளும் கொண்டு செல்லப்பட்டது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் பக்தர்கள் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி வழங்க பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;- “* தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும்,

* 2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும்,

* சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும்,

* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்,

* கொரோனா தடுப்பு பணிக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்” என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்.

இணையவழி கல்விமுறை நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்

இணையவழி வகுப்பு நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அதிமுக அரசு, திறைமறைவில் குழுவை அமைத்து அதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை புறக்கணித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அதிமுக அரசின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் இணையவழி கல்வியை பெறத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை.

ஆசிரியரிடம் நேரடியாக கேள்வி கேட்டு கலந்துரையாடாமல், கல்வியை கற்றுக் கொள்வது சிரமம். கல்வி என்பது கற்றறிய வேண்டியது, அது பங்குச்சந்தை வியாபாரம் போன்றது அல்ல என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

மேலும் இணையவழி கல்வியால் மாணவர்களின் உடல்நிலை பாதிப்படைவதோடு, தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் கணிணியை பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வை குறைபாடுகள் ஏற்படலாம்.

நேரடியாகக் கற்றல்-கற்பித்தல் என்ற வகுப்பறை சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இணையவழிக்கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை. நிழல் நிஜமாகிவிடாது” என்று தெரிவித்துள்ளார். 'டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள்' முழுமையாக இல்லாத தமிழகத்தில் #OnlineClasses மாணவர்களிடயே பாகுபாட்டை உண்டாக்கி எதிர்காலத்தைப் பாழடித்துவிடும்.

குழந்தைகளின் உள - உடல் நலனையும் பாதிக்கும்!

நிழல் நிஜமாகாது என்பதை உணர்ந்து #ADMKgovt இணையவழி கல்விக்கு அனுமதி வழங்கக் கூடாது. pic.twitter.com/uVJxWtM3bF

— M.K.Stalin (@mkstalin) June 17, 2020

காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் சென்னையில் பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த 47 வயது பாலமுரளி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலமுரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாலமுரளியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 25,463 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் 90 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 842 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,624 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 21,990 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் இந்த தொகையை ரேஷன் ஊழியர்கள் மூலம், வரும் 22-ந் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணத் தொகையை விநியோகிக்க முடியாது என தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

கட்டுப்படுத்த பகுதிகளில் காவல்துறை உதவியோடு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினால் தாங்கள் வீடுகளுக்குச் சென்று பொருட்களை விநியோகம் செய்யத் தயார் எனவும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் 22-ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் விநியோகம் செய்யப்படும் என்றும் அந்த 4 மாவட்டங்களில் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவுக்கு பலியான முதல் காவல் அதிகாரி

சென்னையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிகழ்வுகள் சோகத்தை அளித்து வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
காவல்துறையில் இதுவரை கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 47 வயது காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினறை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.