கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் இந்த தொகையை ரேஷன் ஊழியர்கள் மூலம், வரும் 22-ந் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணத் தொகையை விநியோகிக்க முடியாது என தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது.
கட்டுப்படுத்த பகுதிகளில் காவல்துறை உதவியோடு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினால் தாங்கள் வீடுகளுக்குச் சென்று பொருட்களை விநியோகம் செய்யத் தயார் எனவும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் 22-ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் விநியோகம் செய்யப்படும் என்றும் அந்த 4 மாவட்டங்களில் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment