குளச்சலில் பெய்து வரும் கனமழையால் இடி தாக்கியதில், திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்த அறிஞர் அண்ணாவின் சிலை உடைந்து சேதமடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக தீவிரமடைந்து காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது மட்டுமில்லாமல் குளம் குட்டைகள் நிறைந்து வழிந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எனினும் கடந்த இரு வாரங்களாக கனமழை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று மாலை, முதல் குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது குளச்சல் காவல் நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையின் மீது இடி விழுந்ததில் அண்ணாசிலையின் தலைப்பகுதி முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த சிலை 1970 -ம் ஆண்டு அப்போதைய புதுவை முதலமைச்சர் பாருக் மரைக்காயர் முன்னிலையில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. குளச்சலில் இடி தாக்கியதில் அண்ணா சிலையின் தலைப்பகுதி உடைந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது சுகவீனமாக உள்ள நிலையில் அவரால் திறந்து வைக்கப்பட்ட சிலையின் தலை சேதமடைந்திருப்பது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
No comments
Post a Comment