கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார்.
திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பினராய் விஜயன் மகள் வீணாவுக்கும், மருமகன் முகமது ரியாசுக்கும் 43 வயதாகிறது.
வீணா துவக்கத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுமார் எட்டு வருடங்கள் அங்கு பணியாற்றிய பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
பின்னர், 2015ம் ஆண்டு முதல், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Exalogic என்ற ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், 2015ம் ஆண்டு முதல் கணவருடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். தனது வேலையில் முழு கவனம் செலுத்தி வைத்தார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதர் என்பவரின் மகன் முகமது ரியாஸ், பள்ளி நாட்களிலேயே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர். டிஒய்எஃப்ஐ அமைப்பின் இணைச் செயலாளர் அளவுக்கு பதவிக்கு வந்த இவருக்கு 2017ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் ராகவன் என்ற வேட்பாளரிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
முகமது ரியாசுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். 2002ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு அவர் விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த திருமணத்தின்போது ரியாஸ் குழந்தைகள் மற்றும் வீணா குழந்தையும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
பினராயி விஜயன் வீட்டில் வைத்து இன்று நடைபெற்ற இந்த எளிமையான திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மணமகன் வேட்டி சட்டையுடன், மணமகள் எளிமையான புடவை அலங்காரத்துடன் காணப்பட்டனர். தாலி கட்டிய பிறகு திருமணம் பதிவு செய்யப்பட்டது.
No comments
Post a Comment