திரை நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் ஓய்வெடுப்பதற்காக கேரவன் வேன் பிரத்யேகமாக தயார் செய்யப்படும் நிலையில் அந்த வசதிகளை சாதாரண கார்களிலும் வடிவமைத்து தருகிறது கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம்.
எர்ணாகுளம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் இயங்கி வரும் ஓஜேஸ் என்ற வாகன உள்கட்டமைப்பு நிறுவனத்தின் புதுமையான முயற்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக மகேந்திரா பொலிரோவில் வேக்கம் டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது.
திரை நட்சத்திரங்கள் படப்பிடிப்பின் போது ஓய்வெடுத்துக் கொள்ள வசதியாக கேரவன் வேன் அவர்களுக்கு கொடுக்கப்படும். அந்த கேரவன் வேனில் தொலைக்காட்சி, சோஃபா, கழிவறை, உள்ளிட்ட ஒரு அறையில் இருக்கும் சகல வசதிகளும் இருக்கும். இதற்காக அந்த கேரவன் வேன்களுக்கு சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் வாடகை வசூலிக்கப்படும். இதேபோல் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளும் பிரச்சாரத்திற்கு செல்ல இத்தகைய கேரவன் வேன்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவார்கள்.
இதனிடையே இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் விளைவாக பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் அஞ்சுகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப சிறிய கார்கள் அல்லது டூ வீலர்களையே போக்குவரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அதுவும் கொரோனாவுக்கு பிந்தைய காலம் என்பது நிச்சயம் பழைய வாழ்க்கை முறையை ஒட்டி இருக்காது. ஆகையால் புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப இப்போதே மாற்றங்களுக்கு தயாராகி விட்டார்கள் மக்கள்.
அந்த வகையில் பொது கழிவறையை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் தயக்கத்தை கணித்து காரிலேயே கழிவறை பொருத்தும் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது எர்ணாகுளத்தை சேர்ந்தஓஜேஸ் வாகன உள்கட்டமைபு நிறுவனம். பொதுவாக டெம்போ டிராவலர், பேருந்துகளில் மட்டுமே இத்தகைய வசதிகள் செய்யப்படும். முதல்முறையாக காரில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
கழிவுநீர் மற்றும் சுத்தப்படுத்துவதற்கான நீரை சேமிப்பதற்காக இரண்டு தொட்டிகள் அலுமினியம் கோட்டிங்கால் தயார் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 12 Kv மோட்டாரும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே லேபர் சார்ஜ் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட கழிவறை பெட்டியை பொருத்துவதற்காக ரூ.65,000 வரை கட்டணம் வசூலிக்கிறது ஓஜேஸ் வாகன கட்டுமான நிறுவனம்.
No comments
Post a Comment