அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது, நாட்டின் முதலீடு செய்வதற்கு உரிய சாதகமான சூழலையும், முதலீட்டாளர்களின் விருப்பத்தையும் குறிப்பதாக இருக்கிறது என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 15 சதவீதம் அதிகரித்து, 2.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டில், இதே ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 1.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், அதிகளவிலான முதலீடு, சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது. இங்கிருந்து மட்டும், 61 ஆயிரத்து, 420 கோடி ரூபாய் வந்துள்ளது.இதனையடுத்து, கேமேன் தீவுகள், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உள்ளன.இதே போல் முதலீடு அதிகளவில் வந்துள்ளது கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் தான். இதனையடுத்து சேவைகள், வர்த்தகம், ரசாயனம், வாகனம் ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments
Post a Comment