பிரான்சில் ஆசிரியர் ஒருவர் முகமது நபியை அவமதித்ததாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேக்ரானின் கருத்துக்களுக்கு அரபு நாடுகள் பலவற்றில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.பிரான்சில் சில இஸ்லாமிய சமூகங்களில் அதிகாரத்தை கையில் எடுக்கப்போவதாக இஸ்லாமிய பிரிவினைவாதம் அச்சுறுத்துவதற்கெதிராக போராட உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இஸ்லாம் ஒரு மதமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலிலிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மேக்ரான்.
அவரது கருத்துக்களும், மீண்டும் பிரான்சில் வெளிப்படையாகவே முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை கட்டிடங்களின் சுவர்களில் பிரமாண்டமாக ஒளிப்படமாக திரையிட்டதும், சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பிரெஞ்சு தயாரிப்புகளை அரபு நாடுகளும், துருக்கியும் தங்கள் பல்பொருள் அங்காடிகளில் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரமும் துவக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் குறித்த மேக்ரானின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல அரபு நிறுவனங்கள் பிரெஞ்சு தயாரிப்புகளை தங்கள் பல்பொருள் அங்காடிகளிலிருந்து அகற்றிவிட்டன.
#BoycottFrenchProducts என்னும் ஹேஷ்டேக், குவைத், கத்தார், பாலஸ்தீனம், எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி முதலான நாடுகளில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான சவுதி அரேபியாவில், பிரெஞ்சு சூப்பர்மார்க்கெட் சில்லறை விற்பனையாளரான கேரிஃபோரை புறக்கணிப்பது தொடர்பான ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்டானது.குவைத்தில் சில்லறை கூட்டுறவு நிறுவனங்கள் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன.
மேலும், கத்தார் பல்கலைக்கழகம் தன் பங்குக்கு தங்கள் பல்கலைக்கழகத்தில் வழக்கமாக நடக்கும் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்ச்சியை காலவரையறையின்றி தள்ளிவைத்துள்ளது.
No comments
Post a Comment