BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா

தன் கணவருடைய நினைவுகள் நிறைந்த தோப்பு. அந்த நினைவுகள் தரும் உத்வேகத்தால் தினமும் பல கி.மீ கடந்து இங்கே வந்து பரிவோடு தோப்பைப் பராமரிக்கிறார். அந்த வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருள்செலவை தனது பெருங்கொண்ட உழைப்பால் ஈடுசெய்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயி பேச்சியம்மா!
மதுரை நகரிலுள்ள தன் வீட்டிலிருந்து பஸ் ஏறி, நகரத்துக்கு வெளியே 30 கி.மீ தூரம் பயணித்து, செக்கானூரணி தாண்டி கிராமத்துப் பக்கம் குறுகலான ஒற்றையடி தார்ச்சாலையில் பஸ்ஸைவிட்டு இறங்கி, ஊருக்குள் நடக்கத்தொடங்குகிறார். ஒரு மேடேறி, நிழலேதுமற்ற வெட்டவெளியில் மூச்சிரைக்கக் கால்கள் நடக்க, அந்த இரண்டு மணிநேரத்தையும் கடந்துவந்த அசதியைப் போக்க, ஒரு மாமர நிழல் கயிற்றுக் கட்டிலில் ஓய்வாய் அமர்கிறார் பேச்சியம்மா. பின்னணியில் தெரிகின்ற பலநூறு வானுயர்ந்த தென்னைகள், இவருக்கு உரிமையானவை. விளைச்சல் தருகின்ற தனது 25 ஏக்கர் சொந்த பூமியைக் கணவர் இல்லாமல் நிர்வகிக்கிறார் பேச்சியம்மா. 

செக்கானூரணி அருகே பூச்சம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ளது தங்கச்சாமி தோப்பு. கலைஞர் தொடங்கிவைத்த சமத்துவபுரத்தைவிட மூத்தது, இந்தத் தோப்பு. இங்கே தனக்குச் சொந்தமாய் உள்ள விளைநில எல்லைகளைக் கைகாட்டுகிறார் பேச்சியம்மா. கண்மாய்ப்பகுதியில் 1,100 தென்னைகள், மேட்டுப் பகுதியில் தேக்கு, மா, முருங்கை மரங்கள் எனப் பார்க்கும் இடமெல்லாம் பசுமை. வயல் பகுதிகளில் கத்திரி, வெண்டை உள்ளிட்ட செடிகள் காய் விட்டிருக்கின்றன. 

“எனக்கு ரெண்டு மகனுங்க, ஒரு பொண்ணு. பொண்ணு பொறந்தப்போ வீட்டுக்காரரு வாங்கிப் போட்டதுப்பா இந்த இடம். அவருக்கு தோட்டம்னா அவ்ளோ உசுரு. ஒவ்வொரு செடியையும் கண்ணும் கருத்துமா வளர்த்தாரு. பெத்த புள்ள மாதிரி பார்த்துகிட்டார். பொண்ணுக்கு 8 வயசிருக்கும்போது அவரு தவறிட்டாரு. அதுக்கப்புறம் அவரோட உழைப்பை நான் தூக்கி சுமக்க ஆரம்பிச்சேன். இந்த இடம்தான் அவரோட உசுரு, மனசு தங்கின இடம். 
எப்ப தோப்புக்கு வந்தாலும் அவர் பக்கத்துல உட்கார்ந்த மாதிரி மனசுக்கு இதமா இருக்கு. அவர் போனதுக்கு அப்புறமா இதோ ஓடியே போச்சு வருஷம்… 17 வருஷமாச்சு. வீடு, நெலம், தோப்பு, பிள்ளைங்க எல்லாத்தையும் நான்தான் பாத்துக்கிறேன்” என்பவரது வார்த்தைகளில் பிசிரு ஏதுமற்ற உறுதி. சமத்துவபுரத்தில் உள்ளவர்கள் சிலர் இவர் தோப்பில் கூலிவேலை செய்கின்றனர். 

காய்கறிச் செடிகளில் களையெடுப்பது, காய் பிடுங்குவது எல்லாமே இங்கு வரும் பெண் கூலியாள்களின் தினசரி பணி. மா, தென்னை மரம் ஏற ஆள்கள் வெளியிலிருந்து வருகிறார்கள். உள்ளூர்க்காரரான நீலமேகம், மொத்த தோப்புக்கும் மேற்பார்வை பொறுப்பை பார்க்கிறார். அவருக்குச் சமத்துவபுரத்தில் வீடு. 

“பூராவும் செவலை மண்ணுங்கிறதால இங்க எல்லாமே விளையும். ஆனா, தண்ணி பஞ்சம்தான் எங்க பிழைப்பைக் கெடுக்குது” – நீலமேகம் சொல்ல, “இந்த கண்மாய் செழிப்பா இருந்துச்சுன்னா, ரெண்டு கெணத்துலயும் ஊத்து தங்கும். இப்ப போர் போட்டுத்தான் தண்ணி பாய்ச்சணும்னு ஆயிடுச்சு” என வருத்தப்படுகிறார் பேச்சியம்மா. ”தக்காளிக்கு எட்டு நாளைக்கொருமுறை, வெண்டைக்கு மூணு நாளைக்கொருமுறை, கத்திரிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்னு தண்ணி பாய்ச்சணும்” என்று பேச்சியம்மா சொல்ல, நாம் சென்றிருந்தபோது கூலியாள்கள் நல்ல கத்திரியைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். ஒன்றரை மூட்டைத் தேறியது. சமஅளவு சொத்தைக் காய்களும் மிஞ்சிவிட்டன. பரவை மார்க்கெட்டுக்குக் கத்திரிகளை மூட்டைக் கட்டினார் நீலமேகம். “கூலி, வண்டிக்கெல்லாம் போக 200 ரூபா கைக்கு இருக்கும்” என்றபடியே கத்திரிச்செடிகளை காட்டினார் பேச்சியம்மா. 

விதைத்து செடிகள் முளைத்ததும், அவற்றை அறுத்து வேறிடத்துக்கு மாற்றி நட வேண்டும். கத்திரிக்காய் வளர்ப்புப் பக்குவம் அது. வெண்டைச் செடிகளில் காய்களைப் பறிப்பது அவ்வளவு எளிதல்ல. வீரியமான செடிகள் அவை. கைகள் தீயாய் எரியும். ஆனாலும் அனாயசமாக வெண்டைகளைப் பறிக்கிறார் பேச்சி. கழித்துப்போட்ட கத்திரிகள் தோப்பு மாடுகள் நான்குக்குப் பகிரப்பட்டன. தோப்புக்குக் காவலன், வாயில்லா ஜீவன் மணி. ஓட்டம் பிடித்த மாட்டைக் கூட்டிவரச்சொன்னால், விரட்டிச் சென்று மாட்டுக்கயிற்றை வாயில் கவ்வி வலுகொடுத்து இழுத்து நிறுத்திவிடுவானாம் அந்த நாலு கால் கெட்டிக்காரன். யாரும், எதுவும் இவனை மீறி தோப்பை நெருங்க முடிவதே இல்லை. அவன் குரைக்கின்ற சத்தம் அடுத்த தோப்பைச் சென்றடைகிறது. 

Thanks to https://gttaagri.relier.in/
« PREV
NEXT »

No comments