வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களை கரை திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி குமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அனைத்து மீனவர்களும் கரை திரும்பி விட்டதாக தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறினார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தூத்தூர் மீனவர்கள் கேரள கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அவர்கள் மாதக்கணக்கில் கடலில் தங்கி இருந்து மீன் பிடிப்பார்கள். முட்டம் மற்றும் குளச்சல் பகுதி மீனவர்கள் தமிழக கடல் பகுதியில் மீன் பிடிப்பார்கள். தற்போது நிவர் புயல் தமிழகத்தில் கரையை கடப்பதால் முட்டம், குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே புயல் எச்சரிக்கை தொடர்பாக கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அனைத்து மீனவர்களும் கரை திரும்பிவிட்டனர். அதாவது முட்டத்தில் இருந்து சுமார் 275 விசைப்படகுகளிலும், குளச்சலில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளிலும் சென்ற 7 ஆயிரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டனர். இதே போல தூத்தூரில் இருந்து சென்றவர்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் கடலில் தான் இருக்கிறார்கள். ஆனால் அங்கு புயல் எச்சரிக்கை இல்லாததால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் நாட்டு படகு மீனவர்கள் 30 ஆயிரம் பேரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Post a Comment