மும்பையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு ரெயில் மூலம் வந்தனர். அங்கிருந்து அவர்களுக்கு கேரள அரசு மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரையும் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கொண்டு வந்து விட்டனர்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி சோதனை மட்டும் நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 19 பேர் களியக்காவிளையில் இருந்து நெல்லை மாவட்டம் களக்காடு செல்ல நாகர்கோவில் வந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து களக்காடு செல்வதற்கு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர்களிடம் விசாரணை செய்த போது, மும்பையில் இருந்து வந்ததாகவும், களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை இயக்க மறுத்துவிட்டார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன் அனைவரையும் எஸ்.எல்.பி. பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதும் அனைவரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
மும்பையில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், ஊருக்குள் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் இருந்து வந்தவர்கள் வெளிமாவட்டம் என்று கூறி குமரிக்குள் சுற்றினால் என்ன செய்வது, இந்த குளறுபடியால் மீண்டும் ஊருக்குள் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே சென்னை, மராட்டிய மாநில பகுதியில் இருந்து வருபவர்களிடம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது “வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வரும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் வழியாக வேறு மாவட்டத்திற்கு செல்லும் நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்து அவர்கள் பயண விவரம் மற்றும் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது“ என்றனர்.
No comments
Post a Comment