லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்துள்ள மிகப்பெரிய இந்த மோதலால் எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது.
இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தோ-திபெத் படை வீரர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் லடாக்கில் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்காக லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பதற்ற சூழல் நிலை நிறைந்த எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்குமாறு முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் பலத்த உஷார் நிலையை அறிவித்துள்ளனர்.
மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் அடிக்கடி உலவும் என்பதால் கடற்படையும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்திய கடல் எல்லையில் கூடுதல் போர்க்கப்பல்கள் மூலம் ரோந்து பணிகளை கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.
No comments
Post a Comment