கச்சா எண்ணை விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், கிரீஸ் நாட்டின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஐரோப்பிய நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. வளைகுடா நாடுகளின் பங்கு சந்தையிலும் கச்சா எண்ணை விலை வீழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணை விலை வீழ்வது ஒரு வகையில் நல்லது என்றாலும், அதன் பின்விளைவுகள் வேறுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
ஸ்டாக் ஐரோப்பா 600, மற்றும் பிரான்சின் சிஏசி தலா 0.7 சதவீதமும், லண்டனின் எப்டிஎஸ்இ 0.8 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தன. ஜெர்மனியின் பங்கு சந்தையான டாக்ஸ் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இத்தாலியின் பங்கு சந்தை எம்ஐபியும் 0.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. ஸ்பெயின் நாட்டின் ஐபிஇஎக்ஸ் 1.2 சதவீத சரிவை சந்தித்தது.
கிரீசில் நடந்து வரும் தேர்தலில், யூரோ நாடுகளை விட்டு பிரிந்து தனித்து செயல்பட துடிக்கும் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர், சந்தை பார்வையாளர்கள். எண்ணை விலை குறைவதால் பண வாட்டம் அதிகரித்துள்ளதும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்களை அச்சப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, லண்டனின் ஐசிஇ பியூச்சர்ஸ் எக்சேஞ்ச் படி, ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 51.50 அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2009 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இவ்வளவு தூரம் கச்சா எண்ணை விலை வீழ்ந்தது நேற்றுதான். அதே நேரம் நியூசிலாந்து மெர்கன்டைல் எக்சேஞ்ச் நிலவரப்படி, ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 48 அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருந்தது.
எண்ணை உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளின் பங்கு சந்தைகளிலும், இதன் தாக்கம் எதிரொலித்தது. துபாய் பங்கு சந்தை 3450 புள்ளிகளுடன், 3.2 சதவீத வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. பக்கத்து நாடான அபுதாபி பங்கு சந்தை 4311.89 புள்ளிகளுடன் 2.7 சதவீத வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய பங்கு சந்தையான சவுதி அரேபியாவின், தடாவுல், 2.6 சதவீத வீழ்ச்சியுடன், 7894.6 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
No comments
Post a Comment