வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே கடந்த சில ஆண்டுகளாக இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரும் இரு நாட்டின் எல்லையிலுள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் சந்தித்து பேசினர்.
அப்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற விரோத செயல்களை தடுப்பது ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்பியது வடகொரியாவுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்கை தென்கொரியா தடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டிய வடகொரியா, தென் கொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக எல்லையில் உள்ள இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து.
இந்த பிரச்சினையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண்பதற்காக சிறப்பு தூதர்களை வட கொரியாவுக்கு அனுப்ப முடிவு செய்து இதுகுறித்து வடகொரிய அரசுக்கு தெரியப்படுத்தினார்.
ஆனால் தென் கொரிய அதிபரின் வேண்டுகோளை வடகொரியா நிராகரித்துவிட்டது.
இதுகுறித்து வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி. என்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருகிற 15ந் தேதி தென்கொரியாவின் சிறப்புத் தூதர்களை ஏற்றுக் கொள்ளும்படி அதிபர் மூன் ஜே இன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தென் கொரியாவின் தந்திரமான இந்த திட்டத்தை கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜோங் நிராகரித்து விட்டார்“ எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிம் யோ ஜோங் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறப்பு தூதர்களை அனுப்பும் தென் கொரிய அதிபரின் யோசனை நம்பகத்தன்மையற்றது மற்றும் முட்டாள்தனமானது. தற்போதைய நெருக்கடியை சரிசெய்ய தென்கொரியா சரியான விலையைக் கொடுத்தாக வேண்டும். அது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தளங்களாக அறியப்பட்ட பகுதிகளில் வடகொரிய ராணுவம் மீண்டும் நுழைந்துள்ளது.
அதன்படி கொரிய எல்லையில் உள்ள டைமண்ட் மவுண்டன் ரிசார்ட் மற்றும் கைசோங் தொழில் வளாகம் ஆதி பகுதியில் வட கொரிய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் விரைவில் பாதுகாப்பு சாவடிகள் அமைக்கப்படும் என்றும் ராணுவ பயிற்சிகள் தொடங்கப்படும் என்றும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment