BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

சிவராத்திரி கொண்டாடப்படுவதன் வரலாறு என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. இன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரி தோன்றிய வரலாறு

கயிலாய மலையில் வீற்றிருக்கும் அன்னையான பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தன் கைகளால் மூடினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் முழுவதும் அந்தகாரம் சூழ்ந்து அச்சமூட்டியது. அப்போது தனது நெற்றிக்கண்ணான மூன்றாம் கண்ணைத் திறந்தார் ருத்ரன்.

அதன் வெம்மையினால் இந்த உலகம் ஸ்தம்பித்துப்போனது. இதுவே பிரளயகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

வழிபடும் முறை

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். மாலையில், மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். பூஜையில் சிவனுக்குப்பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு.

விரதம்

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி பிரார்த்திக்கலாம். அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பலன்கள்

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

முற்பிறவிகளில் செய்த பாவம், இப்பிறவியில் தெரிந்து, தெரியாமல் செய்த தீமைகளின் வெம்மை நம்மைச் சூழாதிருக்க ருத்ரனின் திருநாமத்தை இன்று இரவு முழுவதும் உச்சரித்தால் போதும்.

அம்பிகையால் உலக நலன்கருதி நடத்தப்பட்ட வழிபாடு இது. பிறருக்காகவும், இந்த உலகத்தினைச் சேர்ந்த அனைவரும் நலமுற்று வாழ ஏற்படும் துன்பங்களையும், தத்தமது விருப்பங்களையும், தேவைகளையும் (உணவு, தூக்கம்) குறைத்துக்கொள்வதின் வெளிப்பாடு தான் இந்த மகா சிவராத்திரி ஆகும்.
« PREV
NEXT »

No comments