தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரிவிளை கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீர் உப்பு சுவையுடன் இருப்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரையே பெரிதும் நம்பியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு தேவையான குடிநீரை அங்குள்ள மக்கள் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் ஒரு வண்டியில் குப்பைகளை அள்ளிக்கொண்டு சென்றனர். இதனை கவனித்த சில பெண்கள் காலி குடங்களுடன் குப்பை வண்டியை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் குழாயில் சில பிரச்சினைகள் இருப்பதால் குடிநீர் முறையாக வழங்க முடியவில்லை, ஓரிரு நாட்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்கப்படும் என செயல் அலுவலர் சசிகலா, பெண்களிடம் தெரிவித்தார்.இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு வந்த தென்தாமரைகுளம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவி பொன். பன்னீர் செல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி பொருளாளர் சுந்தர்சிங் ஆகியோர் போராட்டக்காரர்களிடம், தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பெண்கள் பேரூராட்சி வண்டியை வழிமறித்து காலி குடங்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments
Post a Comment