BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

கட்டுமரம் மூலம் சுழற்சி முறையில் 2 நாட்கள் மீன்பிடிக்க குமரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அனுமதி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் விசைப்படகுகள், கட்டுமரத்தில் சென்று கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிரியர்கள் மீன் சாப்பிட முடியாமல் பரிதவித்தனர். எனவே மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கட்டுமரம் மூலம் சுழற்சி முறையில் 2 நாட்கள் மீன்பிடிக்க குமரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அனுமதி அளித்தது. இதை கட்டுமர மீனவர்கள் ஏற்கவில்லை. தினமும் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மீன்வளத்துறை மறுப்பு தெரிவித்தது. எனினும், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம் என்ற முடிவுக்கு மீனவர்கள் வந்தனர். அதன்படி கடந்த 29-ம் தேதி முதல் குளச்சல், கொட்டில்பாடு, புதூர், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். பின்னர் பங்கு தந்தைகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மேற்பார்வையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று குளச்சல், குறும்பனை கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நாளாகும். அதன்படி காலையில் குறும்பனை, குளச்சல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் மீனவர்களின் வலைகளில் குறைவான மீன்களே கிடைத்தது. இந்த மீன்களை மீனவர்கள் ஏலமிட்டு விற்பனை செய்தனர்.

குறும்பனையில் வெளா மீன்கள், சாளை, அயலை போன்ற மீன்கள் ஓரளவுக்கு கிடைத்தன. இந்த மீன்களை விற்பனை செய்ய குறும்பனை பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த மீன்பிரியர்கள் காலையிலேயே அங்கு திரண்டனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டமாக காட்சி அளித்தது. ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்.

பின்னர் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் கூட்டத்தை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயத்தில், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மீன் வாங்க வந்தவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு மீன்பிரியர்கள் அணிவகுத்து நின்றதை பார்த்து அனைவரும் வியந்து போனார்கள்.

காலை 7 மணிக்கு வந்த மீன்பிரியர்கள் சிலர் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து மீன்களை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து அந்த மீன் பிரியர்கள் கூறுகையில், மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, முதலில் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு போனோம். எனினும், மீன் வாங்கி விட்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவோடு வரிசையில் காத்திருந்தோம். மீன் சாப்பிடத்தானே காத்திருந்தோம், மதுபானத்துக்கு காத்திருக்கவில்லையே என்று நகைச்சுவையாகவும் பதில் அளித்தனர்.
« PREV
NEXT »

No comments